Home> Tamil Nadu
Advertisement

தமிழ்நாடு நாள் எப்பொழுது கொண்டாடப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து

இரண்டு வரலாற்று நிகழ்வுகளை கொண்டாடுவதே பொருத்தமானதாக இருக்கும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

தமிழ்நாடு நாள் எப்பொழுது கொண்டாடப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து

சென்னை: மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டது 1956 நவம்பர் 1 என்பதே வரலாற்று உண்மை. அதேபோல 1967ம் ஆண்டு “தமிழ்நாடு” என பெயர் சூட்டப்பட்டதும் முக்கியத்துவம் உடையதே எனத் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி "தமிழ்நாடு நாள்" கொண்டாடப்படுவதைக் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டுமென்று 1938ஆம் ஆண்டிலிருந்து போராடியது இந்திய பொதுவுடைமை இயக்கம். இந்திய விடுதலைக்குப் பிறகும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. அரசின் அடக்குமுறை, துப்பாக்கிச்சூடு, உயிர்த்தியாகம் என்று நீடித்தப் போராட்டங்களுக்கு பிறகே மத்திய காங்கிரஸ் அரசாங்கம் மொழிவாரி மாநிலங்கள் என்ற கோரிக்கையை ஏற்று 1956 நவம்பர் 1 ந் தேதி சென்னை மாநிலம், கர்நாடக ஏகிகரண சளுவளி, நவ கேரளா, விசாலாந்திரா, சம்யுத்க மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழ்மொழி பேசும் மக்கள் வாழக்கூடிய பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தின் விளைவாகத்தான் திருத்தணி வட்டமும், கன்னியாகுமரி மாவட்டமும் தமிழகத்தின் பகுதியாக இணைக்கப்பட்டு தற்போதுள்ள “தமிழ் மாநிலம்” உருவானதும் இதே நாளில் தான். இந்த கால கட்டத்தில் திமுக திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து போராடிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உருவாக்கப்பட்ட தமிழ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட வேண்டுமென பல கட்ட போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றன. நீண்ட போராட்டத்திறகுப் பிறகு, தமிழ் மொழி அடிப்படையிலான மாநிலம் உருவான போதும், அதற்கு சென்னை மாகாணம் என்றே பெயர் சூட்டப்பட்டது. 

தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வலுவாக குரல் கொடுத்தார்கள். நாடாளுமன்றத்தில் 1961ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டுமென தோழர் பி.ராமமூர்த்தி சட்டதிருத்த மசோதாவை முதன்முதலில் கொண்டு வந்தார். 

இம்மசோதா விவாதத்திற்கு வரும் நேரத்தில், தோழர் பி.ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்த சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் இம்மசோதாவை முன்மொழிந்து மேற்கு வங்கத்தைச் சார்ந்த புபேஷ்குப்தா நாடாளுமன்றத்தில் வாதாடினார். பேரறிஞர் அண்ணா அவர்களும் இத்தீர்மானத்திற்கு ஆதரவளித்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி சங்கரலிங்கனார் விருதுநகரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டார். இறுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சங்கரலிங்கனார் 76ஆவது நாள் மரணமடைந்தார். 

தனது மரணத்திற்கு பின் உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் அவரது உடலை, கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் கே.பி.ஜானகி அம்மாள் அவர்களும், கே.டி.கே.தங்கமணியும் பெற்று அடக்கம் செய்தனர். 

இறுதியில் 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான பிறகே,1967 ஆம் ஆண்டு ஜூலை 18ந் தேதி “தமிழ்நாடு” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

எனவே, மேற்கண்ட இந்த இரண்டு வரலாற்று நிகழ்வுகளை கொண்டாடுவதே பொருத்தமானதாக இருக்கும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More