Home> Tamil Nadu
Advertisement

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தமிழகம் தடை செய்த காரணம் என்ன?

தமிழகத்தில் சூதாட்டம் தொடர்பான தடை என்பது தற்போது வந்ததல்ல. 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசு லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்தது. தற்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது...

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தமிழகம் தடை செய்த காரணம் என்ன?

தமிழ்நாட்டில் கடந்த வாரம் அவசரச் சட்டம் (ordinance) ஒன்று கொண்டு வரப்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாநில அரசின் திட்டத்தின் அடிப்படையில் ஆன்லைன் கேமிங்கை தடை செய்யும் கட்டளை ஒன்றை அறிவித்தார்.

தமிழகத்தில் சூதாட்டம் தொடர்பான தடை என்பது தற்போது வந்ததல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னரே இதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில்  2003 ஆம் ஆண்டில் தமிழக அரசு லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்தது.

தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள் தடைச்சட்டம்,1979-ன் கீழ், தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டதாக  2003 ஆம் ஆண்டில் மாநில அரசு அறிவித்தது.  அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா இந்தச் சட்டத்தை கொண்டுவந்தார்.  

இந்தச் சட்டத்தின்படி லாட்டரி சீட்டு விற்பனை தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. லாட்டரி சீட்டை மட்டுமே விற்பனை செய்து வந்த நிறுவனங்கள் மூடப்பட்டன. அவற்றில் பல நிறுவனங்கள் தற்போதும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் லாபகரமாக இயங்கிவருகின்றன.

தற்போது, லாட்டரிச் சீட்டு இல்லையென்றாலும், ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்துக் கொள்வதாக புகார்கள் வந்தன. இந்த பிரச்சனையை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்திருந்தார். 

கடந்த வார இறுதியில் தமிழக ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அவசரச் சட்டத்தில் "கணினிகள் அல்லது எந்தவொரு தகவல்தொடர்பு சாதனத்தையும் பயன்படுத்தி ஆன்லைனில் சூதாடுவது குற்றம், அவ்வாறு சூதாடுவது தடை செய்யப்படுகிறது. பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் "நிதி மின்னணு பரிமாற்றமும் (electronic transfer of fund)தவறு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விளையாட்டுகளை விளையாடுபவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதமும் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். சூதாட்ட மையங்களை இயக்குபவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.  

மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை பெஞ்ச் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான வழக்கை விசாரித்து வருவது குறிப்பிடத் தக்கது.  

முன்னதாக, தமிழகத்தின் அண்டை மாநிலங்களானஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்துள்ளன.  கர்நாடகா மாநிலமும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை போடுவது பற்றி பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் 

தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Read More