Home> Tamil Nadu
Advertisement

மதுவிலக்கு எதிரான மகளிர் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்

மதுவிலக்கு எதிரான மகளிர் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்

மதுவிலக்கு எதிரான பெண்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதா? என எடப்பாடி பழனிசாமிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியதாவது:-

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றவை; இத்தகைய போராட்டங்களை பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து நடத்துவது ஃபேஷனாகி விட்டது என்று குற்றஞ்சாற்றியுள்ளார். மகளிர் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கமளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்துக்களில் பெரும்பாலானவை இட்டுக்கட்டிய பொய்கள் ஆகும். காவல்துறை எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்ததாலோ என்னவோ அவரது விளக்கம் ஒரு பொய் சாட்சியத்தைக் கேட்பதைப் போன்று இருந்தது. 

உண்மையில் சாமளாபுரம் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் எந்த வகையான அத்துமீறலிலும் ஈடுபடவில்லை. சூலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அவ்வழியே சென்ற போது அவரது மகிழுந்தை பொதுமக்கள் மறித்து, அவரிடம் தங்களின் குறைகளைக் கூறினார்கள். அவரும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தமது ஆதரவை தெரிவித்தார்.

கோபத்தைத் தூண்டும் வகையில் அங்கு எந்த நிகழ்வும் நடக்காத நிலையில் தடியடி நடத்த வேண்டிய அவசியம் என்ன? சாலையோரத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்த பெண்ணின் கன்னத்தில் அறைய வேண்டிய தேவை என்ன?

இந்த நிகழ்வில் பத்திரிகையாளர்களும் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கின்றனர். அவ்வழியே சென்று கொண்டிருந்த அப்பாவி ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார். சிலருக்கு மண்டை உடைந்திருக்கிறது. இதையெல்லாம் மறைத்து விட்டு, காவல்துறையினர் அமைதியின் திருவுருவமாக காட்சியளித்தது போன்றும் பொதுமக்கள் தான் அராஜகத்தில் ஈடுபட்டதைப் போலவும் சித்தரிப்பது முதலமைச்சரின் பதவிக்கு அழகல்ல.

இந்தத் தாக்குதலுக்கு காரணமான காவல் அதிகாரி மீது துறை சார்ந்த விசாரணைக்கு ஆணையிடப் பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் மூலம் தெரிவித்த அரசு, அந்த விசாரணை அறிக்கையை வெளியிடாமல் அவருக்கு பதவி உயர்வு வழங்கியது நியாயமா?

பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சட்டப்போராட்டத்தின் பயனாக தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகள் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த 3321 மதுக்கடைகள் மூடப்பட்டன. அத்துடன் தமிழக அரசு முடித்திருந்தால் எந்த பிரச்சினையும் எழப்போவதில்லை. படிப்படியாக மதுவிலக்கு என்பது தான் அரசின் கொள்கை என்று கூறிவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஓர் வாய்ப்பாக பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான கடைகளை மூடியிருக்க வேண்டும். மாறாக மூடப்பட்டக் கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் வலுக்கட்டாயமாக திறக்க முற்பட்டதால் தான் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டது.

பொதுவாக குடிப்பது ஆண்களாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும் தான். கணவனோ, தந்தையோ, மகனோ, சகோதரனோ குடித்து விட்டு வருவதால் பொருளாதாரம், குடும்ப வன்முறை, உடல்நலம், மனநலம் என அனைத்து வகைகளிலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். 

மதுக்கடைகள் வழியாக பெண்கள் செல்லும்போது குடிகாரர்களின் சீண்டலுக்கு ஆளாகின்றனர். இதனால் குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடை திறப்பதற்கு எதிராக பெண்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்தியது இயல்பான ஒன்று தான். இதை யாரோ தூண்டிவிட்டு தான் பெண்கள் செய்ததாக முதல்வர் கொச்சைப்படுத்தக்கூடாது. மாறாக, பெண்களின் உணர்வுகளை மதித்து செயல்பட வேண்டும்.

அதேபோல், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகளுக்கும், மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கும் எதிராக அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்துவதையும் அவர் கொச்சைப்படுத்தி உள்ளார். கதிராமங்கலத்தில் எண்ணெய்க் குழாய்கள் அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் இப்போது போராட்டம் நடத்துவது ஏன்? என்று முதலமைச்சர் வினா எழுப்பியிருப்பது அபத்தமானது.

15 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் அனுபவித்து வந்த சுற்றுச்சூழல் உள்ளிட்ட பாதிப்புகள் தான் அவர்களை இப்போது போராடத் தூண்டியிருக்கிறது. பல நாள் கொந்தளிப்பு தான் ஒரு நாள் போராட்டமாக வெடிக்கும் என்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாததல்ல.

அன்றாடம் உழைத்தால் தான் உணவு என்ற நிலையில் உள்ள மக்கள் தான் தங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக கடைசி முயற்சியாக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு போராட்டம் என்பது பொழுதுபோக்கல்ல. எனவே, பொதுமக்களின், குறிப்பாக பெண்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாமல் மதுவிலக்கு கோரிக்கையாக இருந்தாலும், கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கிணறுகளை மூடும் கோரிக்கையாக இருந்தாலும் அதை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read More