Home> Tamil Nadu
Advertisement

சுனாமி, கொரோனா வந்தாலும் விசாரிக்க முடியாது... செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது என்ன?

Senthil Balaji Case Update: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப்படும் ஒருவரை முதல் 15 நாட்களுக்குள் காவலில் எடுக்க வேண்டும் எனவும், 15 நாட்களுக்கு பின், சுனாமி, கொரோனா என எந்த காரணமாக இருந்தாலும் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது எனவும் செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது.

சுனாமி, கொரோனா வந்தாலும் விசாரிக்க முடியாது... செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது என்ன?

Senthil Balaji Case Update: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர்  சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி,  அவரது மனைவி மேகலா தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, உரிய நோட்டீஸ் கொடுக்காமல் கைது செய்ததும், கைதுக்கான காரணங்களை தெரிவிக்காததும் சட்டவிரோதம் என்பதால், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதிட்டார்.

மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கைதுக்கான காரணங்களை தெரிவிப்பது அடிப்படை உரிமை என அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அந்த அடிப்படை உரிமையை மீறும் போது ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது எனவும் மூத்த வழக்கறிஞரான என்.ஆர். இளங்கோ குறிப்பிட்டார்.

வாதங்கள் நிறைவு

செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்தது மட்டுமல்லாமல், இயந்திரத்தனமாக அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த ஜூன் 14ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜியை, அவரது உடல்நிலை காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறிய அமலாக்கத் துறை, அவரது சிகிச்சையை போலி என எப்படி கூற முடியும் எனவும் மூத்த வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவலில் உள்ள காலமாக சேர்க்க கூடாது என அமலாக்கத் துறை முன் வைத்த கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப்படும் ஒருவரை முதல் 15 நாட்களுக்குள் காவலில் எடுக்க வேண்டும் எனவும், 15 நாட்களுக்கு பின், சுனாமி, கொரோனா என எந்த காரணமாக இருந்தாலும் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

விசாரணை ஒத்திவைப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில், அமலாக்கத் துறையினருக்கு, காவல்துறை அதிகாரியின் அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை எப்படி அனுமதி கோர முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதம் முடிவடைந்ததை அடுத்து, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை பதில் வாதத்துக்காக, வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அறுவை சிகிச்சை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய ரத்த நாளங்களில் அடைப்பு இருந்ததை அடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் திறந்த இதய அறுவை சிகிச்சை நேற்று காலை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 5 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சைக்கு பின் அவர் நலமுடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மனு

இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்து மனுவில், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு தவறு என குறிப்பிட்டிருந்தது. இதற்கு உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை சந்தேகிக்க இயலாது என கூறி, உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு இந்த மனு மீதான விசாரணை மேற்கொள்ளலாம் என ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும்-அரசு அதிரடி அறிவிப்பு!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More