Home> Tamil Nadu
Advertisement

குடிநீர் பஞ்சத்தை விவரிக்கும் புழல் ஏரியின் செயற்கைக்கோள் படம்!

சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சம் குறித்து அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது!

குடிநீர் பஞ்சத்தை விவரிக்கும் புழல் ஏரியின் செயற்கைக்கோள் படம்!

சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சம் குறித்து அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன. 

சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வளியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள தண்ணீர் பிரச்சினை குறித்து அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் செயற்கைக்கோள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தில், ஜூன் 15-ஆம் தேதி 2018-ஆம் ஆண்டு புழல் ஏரியின் நீர் இருப்பின் அளவோடு,  2019-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கடந்த ஞாயிறு அன்று எடுக்கப்பட்ட புழல் ஏரியின் நீர் இருப்பின் அளவு ஒப்பிடப்பட்டுள்ளது.  சென்னையில் சுமார் 46 லட்சம் மக்களுக்கு புழல் ஏரி தண்ணீர் வழங்குகிறது என குறிப்பிடப்பட்டு  உள்ளது.

இதன்படி., 2018-ஆம் ஆண்டில் புழல் ஏரியின் நீர் இருப்பு அளவில் மிக அதிகமாகவும், தற்போது மிகவும் வறண்ட நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதேபோன்று, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு அளவும் அபாயகரமான நிலையில் உள்ளது எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More