Home> Tamil Nadu
Advertisement

ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தியது தவறா?: கிரண்பேடி!

ஹெல்மெட் அணிய சொல்வது தவறா? இதனை வலியுறுத்தியது தவறா? என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பி உள்ளார்!

ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தியது தவறா?: கிரண்பேடி!

ஹெல்மெட் அணிய சொல்வது தவறா? இதனை வலியுறுத்தியது தவறா? என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பி உள்ளார்!

புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் நாராயணசாமி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் தலைகவச உத்தரவை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதனிடையே மாநில அரசு செயல்படுத்த முடிவு செய்த 30 நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க கிரண்பேடி மறுத்துள்ளதாக குற்றம் சாட்டிய நாராயணசாமி, நேற்று அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்த அவர், பிற்பகலில் ஆளுநர் மாளிகை முன்பு கருப்பு உடை அணிந்து போராட்டத்தை தொடங்கினார்.

இதையடுத்து, இல்லாத பிரச்சனைகளை எழுப்பி, கோரிக்கைகளை பரிசீலிப்பதற்குள் புதுச்சேரி முதலமைச்சர் தர்ணா போராட்டத்தில் இறங்கியுள்ளதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கிரண்பேடி செய்தியாளர்களிடம் பேசினார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இல்லாத பல பிரச்சனைகளை எழுப்பி தமக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும், அந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த தேதிக்குள் பதிலளிக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என ஏற்கெனவே நாராயணசாமி தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார். இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது என்றும், ஹெல்மெட் உத்தரவை அமல்படுத்த இன்னும் எவ்வளவு காலம் வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நினைக்கிறார்? என்றும் கிரண்பேடி வினவினார்.

ஹெல்மெட் அணிய சொல்வது தவறா? நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்துவது தவறா? மத்திய அரசின் தலையீடு இருப்பதாக கூறுவது தவறு. நாராயணசாமி கடிதம் அளித்ததற்கு பதிலாக அவகாசம் அளித்திருக்கலாம். பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கி கடிதமும் அனுப்பி விட்டேன். பிப்ரவரி 21 அன்று காலை 10 மணிக்கு வாருங்கள் பேசலாம் என கூறிவிட்டேன். 

நாராயணசாமி அளித்த கடிதத்தில் இருந்தவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டவை. நேற்று கடிதம் அளித்து விட்டு, அவகாசம் கொடுக்காமல், முன்னறிவிப்பின்றி போராட்டம் நடத்துகிறார். மக்கள் ஹெல்மெட் அணிய அவர் அனுமதிக்கவில்லை. நீங்கள் உடனடியாக பதிலளிக்காவிட்டால் நான் பிப்ரவரி முதல் தர்ணா நடத்துவேன் என்று கூட அவர் கடிதத்தில் குறிப்பிடவில்லை என்றார்.

ஹெல்மெட் உத்தரவை அமல்படுத்தும் விவகாரத்தில் நாராயணசாமி ஏன் குறுக்கே வருகிறார்? என்றும், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றும் அவர் கேட்டார். இதற்காக தன்னை கான்ஸ்டபிள் என அழைத்ததற்கு நன்றி என்றும், அது காவல்துறையில் மிகவும் அடிப்படையான பொறுப்பு என்பதால் பெருமைக்குரியதுதான் என்றும் கிரண்பேடி தெரிவித்தார்.

 

Read More