Home> Tamil Nadu
Advertisement

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: உச்சநீதிமன்றம்

அமமுகவை சுயேட்சையாக தான் கருத முடியும். எனவே சுயேட்சை சின்னம் தான் ஒதுக்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது,.

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: உச்சநீதிமன்றம்

மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது எனவும், மேலும் இன்று கட்சியை பதிவு செய்தாலும் ஒரு மாதம் கழித்துதான் சின்னத்தை ஒதுக்கமுடியும். தற்போது வரை பதிவு செய்யாததால், அமமுக-வை சுயேட்சையாக தான் கருத முடியும். எனவே சுயேட்சை சின்னம் தான் ஒதுக்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

ஆனால் டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல், நாளையுடன்(மார்ச் 26) தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ளதால்,  உடனடியாக பொது சின்னம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். 

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்பதற்கான ஆதாரத்தை தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கை இன்று ஒத்தி வைத்தனர். அன்று மாலையே ஏன் குக்கர் சின்னம் கொடுக்க முடியாது என்பதற்க்கான பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தேர்தல் ஆணையம். 

இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இருதரப்பிலும் காரசாரமாக கடும் விவாதம் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சட்டத்தில் இடம் இல்லையென்றாலும், இரு கட்சிக்கு சின்னம் முக்கியம் என்பதால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பொதுச் சின்னத்தை வழங்குவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read More