Home> Tamil Nadu
Advertisement

சசிகலாவை சந்திப்பு: அமைச்சர்களுக்கு விளக்கம் கேட்டு ஐகோர்ட் நோட்டீஸ்

சசிகலாவை சந்திப்பு: அமைச்சர்களுக்கு விளக்கம் கேட்டு ஐகோர்ட் நோட்டீஸ்

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. 

இதில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்த 4 அமைச்சர்களுக்கும், இதனை கண்டிக்காத தமிழக முதல்வருக்கும் ஐகோர்ட் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., தாமரைக்கனி மகனும் அதிமுகவை சேர்ந்தவருமான ஆணழகன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்தார். 

இந்த மனுவில் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், செல்லூர் ராஜூ ஆகியோர் சிறையில் சசியை சந்தித்து ஆலோசனை கேட்டனர். இது ரகசிய காப்பு பிரமாணத்திற்கு எதிரானது. 
இதனால், அவர்களையும், அமைச்சர்களை கண்டிக்காத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் தகுதியிழப்பு செய்ய வேண்டும் என கோரினார். இந்த மனுவை ஏற்று கொண்ட மதுரை ஐகோர்ட், விளக்கம் அளிக்குமாறு முதல்வர் மற்றும் 4 அமைச்சர் சட்டசபை செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Read More