Home> Tamil Nadu
Advertisement

ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகம் நிறுத்தம்!

மசூர் பருப்பு நச்சுத்தன்மை கொண்டது எனவும், பல்வேறு நோய்கள் வரக்கூடும் எனவும் புகார் எழுந்ததை தொடர்ந்து மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்த தமிழக உணவுத்துறை முடிவு செய்துள்ளது.

ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகம் நிறுத்தம்!

மசூர் வகை பருப்புகளில் நச்சுத்தன்மை இருப்பதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, தமிழக உணவுத்துறையின் பரிந்துரையின் பேரில் ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உளுந்தம்பருப்புக்குப் பதிலாக துவரம் பருப்பு,மசூர் மற்றும் கோசி வகை பருப்புகளை வழங்குவது என்று தமிழக அரசு சமீபத்தில் முடிவு செய்தது. அதற்காக டெண்டர்களும் கோரப்பட்டது.

சிவகங்கை கழனிவாசலை சேர்ந்த ஆதிஜெகநாதன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின்கீழ் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்குவதற்காக மசூர் பருப்பு கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசூர் பருப்பு நச்சுத்தன்மை கொண்டது. இதை சாப்பிட்டால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். 

எனவே, மசூர் பருப்பு கொள்முதல் செய்ய அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும், மசூர் பருப்பு கொள்முதல் டெண்டர் அறிவிப்பையும் ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பருப்பின் தரத்தை ஆய்வு செய்வதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. அந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த பருப்புகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டே விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்தையேற்ற நீதிபதிகள், மசூர் பருப்பு கொள்முதலுக்கு விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விற்பனை செய்ய்ப்பட்டு வந்தது. 

இந்நிலையில் அது தொடர்பான நடைமுறைகள் தொடர்ந்து வந்த நிலையில் மசூர் வகை பருப்புகளில் நச்சுத்தன்மை இருப்பதாகத் தொடர்ந்து பல்வேறு தரப்புகளில் இருந்து எழும் புகார்களைத் தொடர்ந்து, தமிழக உணவுத்துறையின் பரிந்துரையின் பேரில் ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Read More