Home> Tamil Nadu
Advertisement

ஜெயலலிதா மரணம் விவகாரம்: எதிர்க்கட்சிகள் விசாரணைக்கு வலியுறுத்தல்

ஜெயலலிதா மரணம் விவகாரம்: எதிர்க்கட்சிகள் விசாரணைக்கு வலியுறுத்தல்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். 

ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்த நாட்களில் இட்லி சாப்பிட்டதாகவும், ஆப்பிள் சாப்பிட்டதாகவும், டாக்டர் கள், நர்சுகளிடம் பேசியதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின. அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அதிமுக மூத்த தலைவர்கள் கூறினார்கள்.

ஆனால் டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் இதயம் திடீரென்று செயல் இழந்ததாகவும், இதனால் அவர் மரணம் அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு தரப்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் சர்ச்சைகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, அவரது மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இன்னும் விசாரணை கமிஷன் அமைக்கப்படவில்லை.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று முன்தினம் திடீரென்று பரபரப்பான தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

மதுரை பழங்காநத்தத்தில் அவர் பேசுகையில், மருத்துவமைனையில் ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டார் என்று நாங்கள் சொன்னது எல்லாம் பொய். உண்மையிலேயே நாங்கள் யாருமே அதை பார்க்கவில்லை. மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக நாங்கள் இவ்வாறு சொன்னோம். இதற்காக எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.

அவர் இவ்வாறு கூறியது கூட்டத்தினர் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி முரண்பாடான தகவல்கள் வெளியாகி இருப்பதால், அவரது மரணம் குறித்து விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான திமுக வலியுறுத்தி இருக்கிறது.

இதே கோரிக்கையை பாஜக-வும் வலியுறுத்தி இருக்கிறது.

அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி:

“ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்லி வருகிறார்கள். எனவே மாநில அரசு உடனடியாக விசாரணை ஆணையம் மூலம் அதை தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

Read More