Home> Tamil Nadu
Advertisement

புதுமைப் பெண் திட்டம்: திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டம் - உயர்க்கல்வியால் உயரும் பெண்கள்!

Pudhumai Penn Scheme: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைவரையும் உள்ளடக்கிய வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக, கல்லூரி மாணவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதைப்பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.

புதுமைப் பெண் திட்டம்: திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டம் - உயர்க்கல்வியால் உயரும் பெண்கள்!

DMK's Dravidian Model: மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசு அமைந்து மே 7ஆம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. கொரோனா தொற்று பரவல், பொருளாதார மந்தநிலை என பெரும் நெருக்கடியான காலகட்டத்தில், அதுவும் 10 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கைப்பற்றியது.

திராவிட மாடல் அரசு

திமுக இந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறது. 'திராவிட மாடல்' அரசு என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஸ்டாலின் தலைமையிலான அரசு, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர் என அனைவரையும் உள்ளடக்கிய வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைவில் செயல்படுத்த உள்ளதாக அறிவித்திருக்கிறது.  

fallbacks

இதில் குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முன்னெடுப்பு திட்டங்களையும் ஸ்டாலின் தலைமையிலான அரசு வகுத்திருக்கிறது. அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை கவனத்தை பெற்றிருக்கிறது. அந்த வகையில், கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டமும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 

மேலும் படிக்க: பள்ளி மாணவர்களுக்கான பல புதிய திட்டங்களை அறிவித்த முக ஸ்டாலின்!

உயர்க்கல்வி உறுதித் திட்டம்

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவி, உயர்கல்விக்காக கல்லூரி சேர்ந்த பின் அவர் உயர்கல்வியை முடிவு செய்யும் வரை மாதம் ரூ. 1000 இந்த புதுமைப் பெண் திட்டத்தில் வழங்கப்படும். இந்த திட்டம், உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையிலும் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. 

பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டமானது, இந்த ஆட்சியில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்க்கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்தாண்டு செப். 5ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது.

2.2 லட்சம் மாணவிகளுக்கு பயன்

2023-24ஆம் ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட் உரையின்போது, புதுமைப்பெண் திட்டத்தில் தற்போது வரை, 2.2 லட்சம் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மேலும், சுமார் 20 ஆயிரத்து 477  மாணவிகள் புதிதாக உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் என்றும்  புதுமைப்பெண் திட்டத்தால், உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை தற்போது 29 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் கூறினார். 

இந்நிலையில், இத்திட்டம் குறித்தும், இதனால் பெண்கள் அடைந்த பயன்கள் குறித்தும் திமுகவின் செய்தித்தொடர்பாளரும், எழுத்தாளருமான சல்மா பல்வேறு தகவல்களை நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டார். 

மேலும் படிக்க: ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை திட்டம்..அரசு அதிரடி அறிவிப்பு

வரதட்சணையை ஊக்குவிக்கக் கூடாது

"கிராமப் புறங்களில் எப்போதும் பெண் கல்வி என்பது இரண்டாம்பட்சம்தான். பெண்களின் கல்விச்செலவை தேவையற்றது என்பது பொதுவான மனநிலையாக உள்ளது. இதனால், பெற்றோர்கள் பெண்களின் கல்விச்செலவை சுமையாக கருதக்கூடாது என்பதற்காகவும், மாணவிகளுக்கே ஒரு தன்னம்பிக்கையை உருவாக்கும் வகையிலும் இந்த திட்டம் அமைந்துள்ளது.

திருமண உதவித்தொகை மிகவும் தேவையான ஒன்று என்ற கருத்து ஒரு காலத்தில் வலுவாக இருந்தது. ஆனால், தற்போது கல்வி முதன்மையானதாக பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வி, ஒரு சமூகத்திற்கே அளிக்கப்படுவது போன்றது என்ற பழமொழிகள் இங்கே உண்டு, அதனை திமுக தற்போது நிறைவேற்றி வருகிறது. தாலிக்கு தங்கம் வழங்குவது போன்ற திருமண உதவித்திட்டங்கள், வரதட்சணையை அரசு ஊக்குவிப்பதாகவே அமைகிறது. ஒரு பக்கம் வரதட்சணை எதிர்க்கும் வகையில் சட்டம் அமைத்து, தாலிக்கு தங்கம் வழங்குவது முறையாக இருக்காது.  

திருமணம் என்றில்லாமல் பெண்கள் சொந்தக்காலில் வலுவாக நிற்பதே பெண்களுக்கான உண்மையான வளர்ச்சியாகும். பெண்கள் சொந்தக் காலில் நிற்கவைக்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம். பெண்கள் மத்தியில் இந்த மாற்றத்தை அரசு கொண்டுவந்துள்ளது.

மேலும் படிக்க: மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் பெண் போராளிகள் வெளியில் தெரிகின்றனர்!

திருமணம் டூ கல்வி

சுய உதவிக்குழு போன்ற பல்வேறு திட்டங்களை திமுக அரசு தான் கொண்டுவந்தது. குறிப்பாக, 1989ஆம் ஆண்டில் மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண நிதியுதவி திட்டமும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் தான் தொடங்கப்பட்டது. அப்போது, பெண்கள் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்தால் ஒரு உதவித்தொகை, எட்டாம் வகுப்பு வரை படித்தால் ஒரு உதவித்தொகை என பெண்களை கல்வி நோக்கி இழுத்து வந்த முக்கிய திட்டமாக அது பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் பெண்களை படிக்க வைத்ததே கருணாநிதியின் ஆட்சிதான், அதை யாராலும் மறுக்க முடியாது. 

தற்போது அந்த திட்டம் பரிணாமம் பெற்று, திருமணத்தை விடுத்து கல்வியை முன்னிறுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருமணத்திற்கான நிதியுதவியை விட கல்விக்கான நிதியுதவியை தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முதன்மையாக பார்க்கிறது. இதன்மூலம், பெண்களுக்கான கல்வியை கொடுத்து, அவர்களுக்கு வருமானம் பெற வழியை ஏற்படுத்தி கொடுத்து, பொருளாதார ரீதியாக அவர்களை சுயமாக செயல்பட வைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். உயர்கல்வியை வைத்துக்கொண்டு அவர்கள் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு வேலைக்கு கூட செல்ல இயலும். எனவே, கல்வி தான் இந்த சமூகத்திற்கு முக்கியமானதே தவிர வேறெதுவும் இல்லை" என நிறைவுசெய்தார். 

உயர்கல்வியில் தமிழ்நாடு

இவை ஒருபுறம் இருக்க புள்ளி விவரங்களை பார்த்தோமானால், உயர்கல்வியில் சேரும் பெண்களின் விகிதம் இந்தியாவில் 27.3 சதவிகிதமாக உள்ளது. இது, தமிழ்நாட்டில் 49 சதவிகிதமாக உள்ளது. மேலும், கல்வியறிவு பெற்ற பெண்களின் சதவிகிதம் இந்தியாவில் 70.3 சதவிகிதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 73.9 சதவிகிதமாக உள்ளது. பெண் கல்வியில் தமிழ்நாடு ஏற்கெனவே, முன்னணியில் இருந்தாலும் புதுமைப்பெண் திட்டம் அதனை மேலும் ஊக்கப்படுத்தும் என்பதே வல்லுநர்களின் பார்வையாகவும் இருக்கிறது.

மேலும் படிக்க: 80% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More