Home> Tamil Nadu
Advertisement

என்ஐஏ அதிகாரியாக நடித்த சென்னை பாஜக நிர்வாகி... ரெய்டு என்ற பெயரில் ரூ. 20 லட்சம் கொள்ளை!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை விசாரிக்க வந்த என்ஐஏ அதிகாரிகள் என நடித்து, சென்னையை சேர்ந்த ஜமால் என்பவரின் வீட்டில் சோதனை என்ற பெயரில் 20 லட்ச ரூபாயை பாஜக நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் திருடிச் சென்றனர்.

என்ஐஏ அதிகாரியாக நடித்த சென்னை பாஜக நிர்வாகி... ரெய்டு என்ற பெயரில் ரூ. 20 லட்சம் கொள்ளை!

சென்னை முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் ஜமால். இவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து பர்மா பஜார் பகுதியில்  செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த டிச. 13ஆம் தேதி ஜமால் வீட்டிற்கு ஒரு கும்பல் ஒன்று வந்துள்ளது. 

அந்த கும்பல் தங்களை என்ஐஏ அதிகாரிகள் என கூறிக்கொண்டு, கோவை கார் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக சோதனை நடத்த வந்ததாக தெரிவித்துள்ளது. அவர்களின் செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு வீடு முழுவதும் சோதனை செய்துள்ளது.

பின்னர் பர்மா பஜாரில் உள்ள ஜமாலின் கடையிலும் இந்த கும்பல் சோதனை நடத்தியிருக்கிறது. ஜமாலின் வீடு மற்றும் கடையில் இருந்து ஏறத்தாழ 20 லட்சம் ரூபாய்க்கு மேல் எடுத்துக்கொண்டு அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ஜமால் விசாரித்துள்ளார். அப்போதுதான், வீட்டில் சோதனை செய்தது என்ஐஏ அதிகாரிகள் இல்லை என்பது ஜமாலுக்கு தெரியவந்துள்ளது. தான் மோசடி செய்யப்பட்டது குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஜமால் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.  தப்பியோடிய அடையாளம் தெரியாத கும்பலை துறைமுகம் உதவி ஆணையர் வீர குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். 

மேலும் படிக்க | 13 ஆண்டு வரவு செலவை வெளியிடுகிறேன் - வாட்ச் விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி

இதனை தொடர்ந்து, ராயபுரத்தைச் சேர்ந்தவரும், பாஜக நிர்வாகியுமான வேலு (எ) வேங்கை அமரன், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கேஸ் டெலிவரி பணியாளரான புஷ்பராஜ், வீரா (எ) விஜயகுமார், பல்லவன் சாலையைச் சேர்ந்த சப்பரம் தூக்கி பணியாற்றும் கார்த்திக், பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவராஜ் மற்றும் ரவி ஆகிய 6 பேர் இன்று (டிச. 19) ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

பாஜக நிர்வாகி வேலு (எ) வேங்கை அமரன்

fallbacks
முன்னதாக போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் செல்போன் சிக்னல்களை கண்காணித்துள்ளனர். அதில், 6 பேரும் கார் மூலம் ஊட்டிக்குச் சென்றதை கண்டுபிடித்துள்ளனர். 

அதனடிப்படையில், தனிப்படையினர் ஊட்டிக்கு விரைந்தது. அந்த தகவலை அறிந்த குற்றவாளிகள் 6 பேரும் செல்போன்களை அணைத்துவிட்டு, ஊட்டியில் இருந்து பேருந்து மூலம் கோவைக்கு தப்பிச் சென்றுள்ளனர். போலீசாரின் தொடர் விசாரணையில் 6 பேரும் கோவையில் இருந்து சேலம் வழியாக பழனிக்குச் சென்று தலைமறைவானது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் பழனி விரைந்த நிலையில், போலீசில் சிக்கி விடுவோமோ என்ற பயத்தில் 6 பேரும் பழனியில் இருந்து வந்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளதாக போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சரணடைந்த 6 பேரும் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பந்தயம் கட்டுபவர்கள் எனவும், பந்தயங்களில் தோற்று நஷ்டத்திற்கு ஆளானதால், இந்த கும்பலைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான வேலு (எ) வேங்கை அமரன் இந்த செயலுக்கு தலைமை தாங்கியுள்ளதும் தெரியவந்தது. 

மேலும், வேலுவிற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஜமாலிடம் நிறைய பணம் உள்ளது தெரியவந்திருக்கிறது. கூட்டாளிகளான மற்றவர்கள் மோசடிக்கான திட்டத்தை தீட்டிக் கொடுத்துள்ளதாகவும் போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குற்றவாளிகள் 6 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதால், நாளை  (டிச. 20) அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும், அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்திய பின்னரே முழு விவரம் தெரியவரும் எனவும் போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சமூகநீதி பேசும் திமுக பட்டியலினத்தவரை துணை முதலமைச்சராக்குமா? சீறும் வானதி சீனிவாசன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More