Home> Tamil Nadu
Advertisement

ஹைட்ரோகார்பன் திட்டம்: மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டம்: மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் அறிவிப்பு

கடந்த 1991-ம் ஆண்டு முதல் புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டப் பணி மத்திய அரசால் நடந்து வருகிறது. இதன் மூலம் நாட்டுக்கு வருமானம் அதிகரிப்பதோடு, இறக்குமதி செலவும் குறையும். இதற்காக ஏக்கர் கணக்கில் விவசாயிகளிடம் அரசு நிலத்தை குத்தகையாக பெற்றுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கடந்த 15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் தஙகள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், இத்திட்டத்தால் வேளாண் விளைநிலங்களும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறி அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போராட்டத்தின் தாக்கம் அதிகமானது. ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர். நேற்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.

இந்த நிலையில் போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் வேலு என்பவரது தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தினார்கள், மத்திய அரசுக்கு இதுதொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது அவர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்காது என்று உறுதிபட தெரிவித்தார். இதுதொடர்பாக நெடுவாசல் கிராம மக்களிடம் தெரிவித்தனர்.

தமிழக அரசின் அறிவிப்பை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதற்கு கடும் அதிருப்தியை வெளியிட்டனர். 

மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ததாக அறிவிக்க வேண்டும் என்றும், அதுவரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் நெடுவாசல் கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

எத்தனை நாட்கள் ஆனாலும் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம். எங்கள் வாழ்வை அழிக்கும் இந்த திட்டத்தை எப்போதும் செயல்படுத்த விடமாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

15-வது நாளாக இன்று காலையும் நெடுவாசல் கிராமத்தில் உள்ள நாடியம்மன் கோவில் திடலில் ஏராளமானோர் திரண்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் இருந்து இளைஞர்களும், மாணவர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வெளியூர்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நெடுவாசல் கிராம மக்கள் செய்து கொடுத்துள்ளனர்.

Read More