Home> Sports
Advertisement

ஐரோப்பிய கால்பந்து திருவிழா இன்று முதல்...

ஐரோப்பிய கால்பந்து திருவிழா இன்று முதல்...

மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து கோப்பை போட்டி தொடங்கயுள்ளது. இந்த தொடரில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே கலந்து கொள்ளும்.

உலகக் கோப்பையை போலவே இந்த தொடரும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2012 -ம் ஆண்டு நடந்த போட்டியில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் பெற்றது.

15-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்சில் இன்று நள்ளிரவு தொடங்குகிறது. ஜுன் 10-ம் தேதி தொடங்கி ஜூலை 10-ம் தேதி வரை ஒரு மாத காலம் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. மொத்தம் 54 ஆட்டங்கள் நடைப்பெறுகிறது. 24 நாடுகள் பங்கேற்கின்றன. இவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் 16 அணிகள் மோதும். லீக் சுற்றில் 6 பிரிவுகளிலும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகளின் புள்ளிகள் அடிப்படையில் மீதமுள்ள 4 அணிகள் தேர்வாகும்.

இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு செயின்ட் டெனிஸ் நகரில் உள்ள ஸ்டேடு டி பிரான்ஸ் மைதானத்தில் போட்டி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ருமேனியா மோதுகிறது. இந்த தொடரை சோனி சிக்ஸ் மற்றும் சோனி இஎஸ்பிஎன் சானல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

22-ம் தேதி வரை லீக் ஆட்டம் நடைபெறுகிறது. 25-ம் தேதி நாக் அவுட் சுற்று தொடங்கும். காலிறுதி ஆட்டங்கள் ஜூன் 30, ஜூலை 1 மற்றும் 3, 4-ம் தேதிகளிலும், ஜூலை 6 மற்றும் 7-ம் தேதிகளில் அரையிறுதியும், 10-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும்.

3 முறை உலகின் சிறந்த வீரர் விருதை பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), இனியஸ்டா (ஸ்பெயின்), தாமஸ் முல்லர் (ஜெர்மனி), பால் போக்பா (பிரான்ஸ்) ஆகியோர் தங்களது நளினமான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடரின் மொத்த பரிசுத் தொகை 2 ஆயிரத்து 273 கோடி. பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.60 கோடியும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.37 கோடியும் வழங்கப்படும்.

இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற நாடுகள்:-

1960–சோவியத் யூனியன்

1964–ஸ்பெயின்

1968–இத்தாலி

1972–மேற்கு ஜெர்மனி

1976–செக்கோஸ்லோவக்கியா

1980–மேற்கு ஜெர்மனி

1984–பிரான்ஸ்

1988–நெதர்லாந்து

1992–டென்மார்க்

1996–ஜெர்மனி

2000–பிரான்ஸ்

2004–கிரீஸ்

2008–ஸ்பெயின்

2012–ஸ்பெயின.

 

 

Read More