Home> Sports
Advertisement

IND vs SL: ஒரே சிக்ஸரில் ரோஹித் இரண்டு சாதனை... ஆனால் போட்டியில் இலங்கையின் ஆதிக்கம்!

India vs Sri Lanka: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியின் டாப் ஆர்டர் இலங்கையின் வெல்லலகேவிடம் வீழ்ந்து தற்போது திணறி வருகிறது.   

IND vs SL: ஒரே சிக்ஸரில் ரோஹித் இரண்டு சாதனை... ஆனால் போட்டியில் இலங்கையின் ஆதிக்கம்!

India vs Sri Lanka: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சூப்பர் 4 சுற்றின் புள்ளிப்பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை தலா 1 வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களில் உள்ளன. வங்கதேசம் தனது 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது. இதில், முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் செப். 17ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மோதும். 

அந்த வகையில், இந்திய அணி, இலங்கை அணியுடன் இன்று விளையாடி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு நேற்று முன்தினம் போட்டி நடைபெற்ற நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரிசர்வ் டே ஆன நேற்றும் தொடர்ந்தது. அதில், பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றியை பெற்றிருந்தது. அதன்பின், சுமார் 16 மணிநேர இடைவெளியில் மற்றொரு ஒருநாள் போட்டியை இந்தியா இன்று விளையாடி வருகிறது. 

இந்த போட்டியும் கொழும்பு பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் டாஸை வென்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இலங்கை அணி தனது பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யாத நிலையில், இந்திய அணி ஷர்துல் தாக்கூருக்கு பதில் கூடுதல் சுழற்பந்துவீச்சாளராக அக்சர் படேலை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ரோஹித் - கில் ஜோடி களமிறங்கி இலங்கையின் தொடக்க பந்துவீச்சை சிதறடித்தது. 

குறிப்பாக, ரோஹித் சர்மா கசுன் ரஜிதா, பதிரானா, ஷனகா ஆகியோரின் ஓவரில் பவுண்டரிகளையும் சிக்ஸரையும் குவித்தார். இந்த ஜோடி முதல் 10 ஓவர்களில் 65 ரன்களை சேர்த்தது. கூடவே, 44 பந்துகளில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து, 12ஆவது ஓவரை துனித் வெல்லலகே வீச வந்தார்.

மேலும் படிக்க | IND vs SL: பிளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்த இந்திய அணி

அவரின் முதல் பந்திலேயே நிதானம் காட்டி வந்த சுப்மான் கில் போல்டாகி ஆட்டமிழந்தார். கில் 25 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களை எடுத்திருந்தார். நேற்றும் சதம் அடித்து அசத்திய விராட் கோலி களமிறங்கினார். ஆனால், வெல்லலகே வீசிய 14ஆவது ஓவரில் 5ஆவது பந்தில் ஷார்ட் மிட் விக்கெட்டில் நின்றுகொண்டிருந்த ஷனாகாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 12 பந்துகளை சந்தித்து 3 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். இந்த பிரேமதாச மைதானத்தில் கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் சதம் அடித்திருந்த விராட் கோலி இம்முறை ஏமாற்றமளித்தார். zeenews.india.com/tamil/photo-gallery/illustrious-career-in-odi-of-virat-kohli-proves-he-is-goat-means-greatest-of-all-time-in-50-over-cricket-463309

தொடர்ந்து, வெல்லலகே வீசிய 16ஆவது ஓவரின் முதல் பந்தில் செட்டிலாகி இருந்த ரோஹித் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். ரோஹித் சர்மா 48 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 53 ரன்களை எடுத்திருந்தார். 80 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்தியா, 91 ரன்களுக்கு ரோஹித், கில், விராட் என டாப் 3 பேட்டர்களையும் இழந்தது. தற்போது இஷான் கிஷன் - கே.எல். ராகுல் களத்தில் விளையாடி வருகின்றனர். 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 109 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய அணி பேட்டிங்கில் சற்று தடுமாறி வந்தாலும், கேப்டன் ரோஹித் சர்மா ஒரு தனித்துவமான சாதனையையும் படைத்தார். அதாவது, ஒருநாள் அரங்கில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதுபோன்று ஒருநாள் அரங்கில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6ஆவது இந்திய வீரர், ஒட்டுமொத்தமாக 15ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

10 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த இரண்டாவது பேட்டர் என்ற சாதனையும் பெற்றார். சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், சவுரவ் கங்குலி, பிரையன் லாரா, கிறிஸ் கெய்ல், எம்எஸ் தோனி மற்றும் அவரது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இவர் முந்தினார். இன்று இலங்கையுடன் விளையாடி வரும் அவர் தனது 241வது ஒருநாள் இன்னிங்ஸை விளையாடி வருகிறார். அதில் ஒரு சிக்ஸரை அடித்து அவரின் 10 ஆயிரம் ரன்கள் மைல்கல்லை எட்டினார்.

விராட் கோலி இதில் முன்னணியில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 205 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை எட்டியதன் மூலம் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் உள்ளார், மேலும் அதில் கேப்டன் ரோஹித் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். டெண்டுல்கர், கங்குலியை விட 22, பாண்டிங்கை விட 25 மற்றும் தோனியை விட 18 குறைவான இன்னிங்ஸ்களில் ரோஹித் இந்த சாதனையை படைத்தார். லாரா (278), கெய்ல் (282), டிராவிட் (287), திலகரத்ன தில்ஷன் (293) போன்றோர் இந்த பட்டியலில் கீழே தள்ளப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் ரன்களுக்குள் நுழைந்ததைத் தவிர, ரோஹித் ஒரு சிக்ஸரை அடித்து, ஆசியக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். விராட் கோலி ஒருநாள் அரங்கில் 13 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஹிந்துவாக இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் விளையாடிய வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More