Home> Sports
Advertisement

யூரோ கோப்பை : கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏமாற்றம். ஆட்டம் டிரா

யூரோ கோப்பை : கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏமாற்றம்.  ஆட்டம் டிரா

பிரான்சில் நடைபெறும் யூரோ 2016 கால்பந்து தொடரின் எஃப் பிரிவு அணிகளான போர்ச்சுக்கல் மற்றும் ஐஸ்லாந்து அணி மோதின. இந்த ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஐஸ்லாந்து அணி முக்கியமான தொடர் ஒன்றில் ஆடுவது இதுவே முதல் முறை. ஆனால் தொடக்கத்தில் கைல்ஃபி சைகுர்ட்சன் கோல் அடிக்க முயன்றார் ஆனால் போர்ச்சுகல் கோல் கீப்பர் ருய் பேட்ர்சியோவைத் தாண்ட முடியவில்லை. 

பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த அபாரமான கிராஸ் நானியிடம் வர அவர் தலையால் முட்டி கோலுக்குள் செலுத்த முயன்றபோது தடுக்கப்பட்டது. மிகவும் நெருக்கமான வாய்ப்பு. பிறகு ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் வலது புறத்தில் போர்ச்சுகல் வீரர் ஆந்த்ரே கோம்ஸ் அற்புதமான ஒரு ஆட்டத்தில் ஐஸ்லாந்து வீரர்களுக்குப் போக்கு காட்டி பிறகு தாழ்வாக கிராஸ் ஒன்றைச் செய்ய அருகிலிருந்த நானி கோலாக மாற்றினார், போர்ச்சுகல் 1-0 என்று முன்னிலை பெற்றது.

50-வது நிமிடத்தின் போது ஐஸ்லாந்து வீரர் ஜொஹான் பெர்க் குட்மண்ட்சன் வலதுபக்கத்திலிருந்து கிராஸ் ஒன்றை அடிக்க அது ஜார்னேசனிடம் வர அவர் அதனை அருமையாக கோலாக மாற்றி சமன் செய்தார், போர்ச்சுகல் அதிர்ச்சியடைந்தது. அதன் பிறகு ரொனால்டோ சரியாக மார்க் செய்யப்பட்டார். இதனால் 56-வது நிமிடத்தில் அவரது ஒரு நகர்த்தல் தோல்வி அடைந்தது. 71-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க அதனை ரஃபேல் கிரைரோ அடித்தார், பந்து நானியிடம் வர மற்றொரு தலையால் அடிக்கும் கோல் முயற்சி கோலுக்கு வெளியே சென்றது. ரொனால்டோவின் கோல் முயற்சி ஒன்றும் கோல்போஸ்டுக்கு மேலே சென்றது. 

85-வது நிமிடத்தில் ரொனால்டோவின் தலையால் அடிக்கும் கோல் முயற்சியும் தடுக்கப்பட, கடைசியில் ரொனால்டோவுக்குக் கிடைத்த 2 ஃப்ரீ கிக் வாய்ப்புகளிலும் கூட கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஐஸ்லாந்துடன் 1-1 என்று டிரா செய்து ஏமாற்றமளித்தது போர்ச்சுகல்.

Read More