Home> Sports
Advertisement

வந்தாச்சு இந்த 3 பேர்... இந்திய அணி பிளேயிங் லெவனில் மாற்றம் உறுதி - யாருக்கு பதில் யாருக்கு வாய்ப்பு?

IND vs ZIM Playing XI Changes: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சிவம் தூபே ஆகியோர் இந்திய அணி இணைந்துள்ளதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஏற்படப்போகும் பிளேயிங் லெவன் மாற்றங்கள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.

வந்தாச்சு இந்த 3 பேர்... இந்திய அணி பிளேயிங் லெவனில் மாற்றம் உறுதி - யாருக்கு பதில் யாருக்கு வாய்ப்பு?

IND vs ZIM Playing XI Changes: சுப்மன் கில் தலைமையிலான இந்திய இளம் அணி தற்போது ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாவ்வே - இந்தியா மோதி வருகின்றன. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டிகளில் முறையே ஜிம்பாப்வே, இந்தியா வெற்றி பெற்று, தொடர் 1-1 என்ற நிலையில் உள்ளது. 

இந்த தொடரின் மூன்றாவது டி20 போட்டி நாளை மறுதினம் (ஜூலை 10) நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சிவம் தூபே ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், டி20 உலகக் கோப்பையை வென்றதால் அதுசார்ந்த கொண்டாட்டம் காரணமாகவும், இறுதிப்போட்டி நடந்த பார்படாஸில் ஏற்பட்ட புயலால் வந்த நாடு திரும்புவதற்கு தாமதமானதாலும் முதலிரண்டு போட்டிகளில் மட்டும் இவர்கள் இடம்பெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. மேலும், முதலிரண்டு போட்டிகளுக்கு மட்டும் சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

IND vs ZIM: மாற்றம் வருமா?

இதில் முதலிரண்டு போட்டிகளில் ஜித்தேஷ் மற்றும் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சாய் சுதர்சனுக்கு நேற்றைய இரண்டாவது போட்டியில் வாய்ப்பு கிடைத்தாலும் அவர் பேட்டிங் இறங்கவில்லை, பீல்டிங் மட்டும் செய்தார். இது ஒருபுறம் இருக்க இப்போது மூன்றாவது போட்டியை முன்னிட்டு டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், தூபே ஆகியோரும் வருகை தந்திருப்பதால் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட உள்ளன என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | ரோகித் சர்மாவிடம் அடுத்த 2 கோப்பைகளுக்கான மிஷனை ஒப்படைத்த ஜெய்ஷா

ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பில்லை...!

தொடக்க வீரரான அபிஷேக் சர்மா நேற்றைய போட்டியில் 47 பந்துகளில் சதம் அடித்து தனது இடத்தை உறுதி செய்துவிட்ட நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம் கிடைப்பதே சந்தேகம்தான். ருதுராஜ் கெய்க்வாட்டும் நேற்று சிறப்பாக விளையாடியிருந்தார். இது கேப்டன் கில்லுக்கு தலைவலியை கொடுக்கலாம். மறுபுறம் சஞ்சு சாம்சன் மற்றும் தூபே ஆகியோர் மிடில் ஆர்டரில் விளையாடுவார்கள் என்பதால் அவர்களில் ஒருவருக்கு வாய்ப்புள்ளது. ஜெய்ஸ்வால் மிடிலில் விளையாட வாய்ப்பும் குறைவே...

சாம்சன் vs தூபே

நேற்று கலீல் அகமது அமரவைக்கப்பட்டு கூடுதல் பேட்டரான சாய் சுதர்சனுடன் இந்தியா விளையாடியது. 7ஆவது வீரர் வரை பேட்டிங் வரிசை இருந்தது, 5 பௌலிங் ஆப்ஷனே இருந்தது. ஒருவேளை மூன்றாவது போட்டியில் அந்த சாய் சுதர்சன் இடத்திற்கு தூபே வரும்பட்சத்தில் கூடுதல் வேகப்பந்துவீச்சு ஆப்ஷனும் இந்தியாவுக்கு கிடைக்கும். விக்கெட் கீப்பிங் கிளவுஸ் சஞ்சுவுக்கு செல்லுமா அல்லது சக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் துருவ் ஜூரேலே தொடர்வாரா என்பதும் கில் - லஷ்மண் ஆகியோரின் கையிலேயே உள்ளன. இதே வியூகத்தில் செல்வார்கள் எனில் சாய் சுதர்சன் இடத்தில் சஞ்சு சாம்சன் மட்டும் இடம்பெறலாம். சஞ்சு சாம்சனும், தூபேவும் ஒன்றாக விளையாடினாலும் மிடில் ஆர்டர் பலமாகவே இருக்கும்.

ஆப்ஷன்கள் எக்கச்சக்கம்

எனவே, மூன்றாவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனை அமைப்பது என்பது கில்லுக்கு ஒரு பெரிய தலைவலியையும், சிக்கலையும் தரலாம். கூடுதல் பௌலிங் ஆப்ஷன் தேவைதானா... இளம் வீரருக்கு வாய்ப்பளிக்கவா அல்லது சீனியரை உள்ளே கொண்டு வருவதா... ஓப்பனிங்கில் மாற்றம் வேண்டுமா என இத்தனை கேள்விகளுக்கும் கில் விரைவில் தக்க பதிலை கண்டுபிடித்தால் மட்டுமே இந்திய அணியின் வெற்றி தொடரும். காம்பினேஷனில் சிக்கல் வந்தாலும் சிறு பிரச்னை ஏற்படலாம். 

ஜெய்ஸ்வால், சாம்சன், தூபே ஆகியோரின் வருகை குறித்து நேற்றைய வெற்றிக்கு பின் பேசிய கேப்டன் சுப்மன் கில்,"...எங்களுக்கு இன்னும் மூன்று போட்டிகள் உள்ளன, அவர்களை எதிர்பார்த்திருந்தோம். ஆப்ஷனே இல்லாமல் இருப்பதை விட நிறைய ஆப்ஷனுடன் இருப்பது நல்லது தானே..." என பதிலளித்தார். 

மேலும் படிக்க | ரோகித் சர்மாவை ஸ்பெஷலாக கவனித்த அம்பானி - கூட இருந்த அந்த 2 பேருக்கும் ஜாக்பாட்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More