Home> Lifestyle
Advertisement

ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்: ரஜினி என்கிற சிவாஜி ராவ்!!

ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் கைக்வாட் டிசம்பர் 12, 1950-ம் ஆண்டு ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். 

ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்: ரஜினி என்கிற சிவாஜி ராவ்!!

ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் கைக்வாட் டிசம்பர் 12, 1950-ம் ஆண்டு ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். 

அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆசை வளர்ந்தது.

16 பிப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். ஐசுவர்யா, செளந்தர்யா ஆகியோர் இரு மகள்கள் ஆவார். 

நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ரஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975-ம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. 

அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராசா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. 

தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்தார். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமயப் புனிதரான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்ற மகானின் வாழ்க்கை பற்றியது.

1980களில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 

2002-ம் ஆண்டு வெளிவந்த பாபா (திரைப்படம்) சில இடங்களில் வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகிக்கும் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த சிவாஜிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2010ஆம் ஆண்டு வெளியாகிய எந்திரன் படம் பெரு வெற்றியைப் பெற்றது.

ரஜினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாக உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்ப்பதாக இருக்கும். தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 160 திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

ரசினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

1990களில் ரஜினிகாந்த் நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக பரவலாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த தேர்தல்களில், ரஜினிகாந்த் எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை.

2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ச.க தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், ரஜினிகாந்த் அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார். 

2008 நவம்பர் 3 அன்று ரசிகர்களை சந்தித்து பேசினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது, எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாகக் கூறினார். லிங்கா பட இசை வெளியீட்டின் போது "அரசியலுக்கு வர வேண்டும் என இருந்தால் வருவேன்" எனக் கூறினார்.

தற்போது சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து பேசினார். அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் பட்டும் படாமல் அரசியலில் வருவாதாக கூறியிருந்தார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'காலா' படத்தின் இரண்டாவது புதிய போஸ்டரை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்தப் போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மேலும் இன்று அவரது பிறந்தநாள் என்பதால் அவர் அவரது அரசியல் பிரவேசம் குறித்து எதாவது முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read More