Home> Tamil Nadu
Advertisement

டிடிவி-யின் குக்கர் சின்னத்திற்கு உச்சநீதிமன்றம் தடை!

டிடிவி தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத்தடை உச்சநீதிமன்றம்!

டிடிவி-யின் குக்கர் சின்னத்திற்கு உச்சநீதிமன்றம் தடை!

தினகரனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து மற்ற தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தனக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். 

ஆர்.கே.நகர் தேர்தலுக்கு தான் பயன்படுத்திய குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படியும், அதேபோல் கட்சியின் பெயருக்கு தான் பரிந்துரைத்துள்ள 3 பெயர்களில் ஏதேனும் ஒரு பெயரை தரும்படியும் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவில், தினகரன் கேட்டபடி அவருக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு  டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல் கட்சியின் பெயராக அவர் பரிந்துரைத்ததன் அடிப்படையில் 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்' என பெயர் வைக்கப்பட்டது. 

இந்தநிலையில் அ.தி.மு.க தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மதுசூதனன் ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், தினகரனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு இடைக்காலத்தடை விதித்து  நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இரட்டை இலை சின்னம் அ.தி.மு.கவுக்கு ஒதுக்கியதற்கு எதிராக தினகரன் தொடர்ந்த வழக்கில் 3 வார காலத்திற்குள் தீர்ப்பு வழங்க டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.

Read More