Home> India
Advertisement

மதத்தின் பெயரால் ஓட்டு கேட்பது சட்டவிரோதம்- சுப்ரீம் கோர்ட்

சாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி தேர்தலில் ஓட்டு கேட்பது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்தது.

மதத்தின் பெயரால் ஓட்டு கேட்பது சட்டவிரோதம்- சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி: சாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி தேர்தலில் ஓட்டு கேட்பது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்தது.

சாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு 1995-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் இந்துத்துவா என்பது இந்திய துணைக் கண்டத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வியல் முறை ஆகும். ஒரு வேட்பாளர் அதை சேர்ந்தவராக இருப்பதால் மட்டுமே தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்திவிடாது என்று கூறி இருந்தது.

இதை மறு பரிசீலனை செய்யக்கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையில் எம்.பி.லோகுர், எஸ்.ஏ.பாப்டே, எல்.என்.ராவ், யு.யு.லலித், ஏ.கே.கோயல், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது வந்தது.

மதத்தின் பெயரில் ஓட்டு கேட்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123-வது பிரிவின்படி ஊழல் போன்றதா என்ற கேள்வியின் அடிப்படையில் விசாரணை நடந்தது. இதன் இறுதி விசாரணை கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி முடிந்து நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு அளித்தது. 7 நீதிபதிகள் அமர்வில், தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், எம்.பி.லோகுர், எஸ்.ஏ.பாப்டே, எல்.என்.ராவ் ஆகிய 4 நீதிபதிகளும் தேர்தலின்போது, சாதி மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்கக்கூடாது. 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123-(3) வது பிரிவில் மதம் என்று கூறப்பட்டு இருக்கும் வார்த்தை வேட்பாளரின் மதத்தை மட்டுமே குறிப்பதாகும் என்று நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.கே.கோயல், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய 3 நீதிபதிகளும் முந்தைய தீர்ப்புக்கு ஆதரவாக தெரிவித்தனர்.

தேர்தல் சட்டவிதிமுறைகளை மிகவும் விரிவாக ஆய்வு செய்தபோது, மதம், இனம், சாதி, வகுப்பு அல்லது மொழியின் பெயரால் ஓட்டு கேட்பது ஊழல் நடவடிக்கைதான் என்பது உறுதியாகிறது.

தேர்தல் என்பது மதசார்பற்ற நடவடிக்கை ஆகும். எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வாக்காளர்களிடம் மதம், சாதி, இனம், மொழி ஆகியவற்றை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டவிரோதமானது ஆகும். மதத்தை தேர்தல் காரணங்களுக்காக எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. 

Read More