Home> India
Advertisement

நான் தயாராக இருக்கிறேன் - நடத்துங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை: குமாரசாமி

நான் வாக்களிக்கத் தயாராக இருக்கிறேன். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள். எனது பேச்சு முடித்துக்கொள்கிறேன் என முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்

நான் தயாராக இருக்கிறேன் - நடத்துங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை: குமாரசாமி

பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துங்கள். நான் தயாராக இருக்கிறேன் என கர்நாடக முதல்வர் குமாரசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனால் ஆளும் அரசு தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது. 

இதனையடுத்து கடந்த ஜூலை 18 (வியாழக்கிழமை) அன்று கர்நாடக சட்டப்பேரவை கூடியது. அப்பொழுது முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு நாட்களாக வாக்கெடுப்பை நடத்தாமல், விவாதம் மட்டும் நடத்தி வந்தனர். இதனால் கோபமடைந்த எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவைக்குள் தர்ணா போராட்டம் உட்பட பல எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

ஒருவழியாக இன்று மீண்டும் சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூடியது. அப்பொழுது சபாநாயகர் மாலை 4 மணிக்குள் விவாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும், 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அவையில் அறிவித்துள்ளார். 

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு அடுத்த 48 மணி நேரத்திற்கு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், தற்போது சட்டசபையில் முதல்வர் குமாரசாமி உணர்ச்சி வசப்பட்டு பேசி வருகிறார். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துங்கள். நான் தயாராக இருக்கிறேன். எனக்கு எந்தவிதமான பதற்றமும் இல்லை என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Read More