Home> India
Advertisement

வினேஷ் போகத்திற்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியா? - இதற்கு அவர் தகுதி பெற்றவரா?

Vinesh Phogat: வினேஷ் போகத்தை ராஜ்ய சபா உறுப்பினராக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், அதற்கு அவருக்கு தகுதி உள்ளதா என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.

வினேஷ் போகத்திற்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியா? -  இதற்கு அவர் தகுதி பெற்றவரா?

Vinesh Phogat Latest News Updates: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இருந்து போட்டியில் அனுமதிக்கப்பட்ட உடல் எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்த காரணத்தால் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டது நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. வினேஷ் போகத் விவகாரம் உலகளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

தற்போது விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தை வினேஷ் போகத் சார்பில் இந்தியா நாடியுள்ளார். இறுதிப்போட்டி வரை தகுதிபெற்ற தனக்கு குறைந்தபட்சம் கூட்டு வெள்ளிப் பதக்கமாவது வழங்க வேண்டும் என அந்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். வினேஷ் போகத் சார்பில் இந்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலான ஹரீஷ் சால்வே ஆஜராகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது இதற்கான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒலிம்பிக் தொடர் நிறைவு பெறுவதற்குள் இந்த விவாகரத்தில் தீர்ப்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வினேஷ் போகத் விவகாரம்

வினேஷ் போகத் விவகாரம் நேற்று (ஆக. 8) நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே வினேஷ் போகத் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தார். இருப்பினும், மாநிலங்களவை அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அதற்கு அனுமதியளிக்கவில்லை. மேலும் இவ்விவகாரத்தை அரசியலாக்கி வினேஷ் போகத்திற்கு மரியாதை குறைவை ஏற்படுத்த வேண்டாம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | பஞ்சாப்பைச் சேர்ந்த ஹாக்கி வீரர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் பரிசு: பகவந்த் மான் அறிவிப்பு

இருப்பினும், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிவது முக்கியம் என தெரிவித்த எதிர்க்கட்சிகள், அனுமதி மறுக்கப்பட்டதால் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்ததையும் பார்க்க முடிந்தது. இது ஒருபுறம் இருக்க, வினேஷ் போகத்தை வெள்ளிப் பதக்கம் வென்றவராக கருதி, அவருக்கு பதக்கம் வென்றவர்களுக்கு வழங்கப்படும் வரவேற்பு, மரியாதை, வெகுமதிகள், சலுகைகள் ஆகிய அனைத்தும் வழங்கப்படும் என ஹரியானா மாநில அரசும் தெரிவித்திருந்தது பல்வேறு தரப்பில் பாராட்டை பெற்றது. 

வினேஷ் போகத்திற்கு தகுதி இருக்கா...?

இந்நிலையில், ஹரியானா வினேஷ் போகத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா வினேஷ் போகத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார். ஹரியானாவில் அடுத்த மாதம் 12 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு இதை அவர் தெரிவித்தார். 

இருப்பினும், விதிகளின்படி வினேஷ் போகத்தை மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்க முடியாது. 30 வயதுக்கு மேற்பட்டோரையே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய வேண்டும் என விதி இருக்கிறது. வினேஷ் போகத்திற்கு வயது 29 ஆகும். அவரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய இயலாது என்றும் கூறப்படுகிறது. மறுபுறம் வரும் ஆக. 25ஆம் தேதியுடன் அவர் 30 வயதை அடைகிறார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இருந்தாலும் அவரால் மாநிலங்களவை உறுப்பினராக முடியாது எனலாம்.

4 நாள்கள் 

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவரை மாநிலங்களவை உறுப்பினராக்க விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு சட்டமன்றத்தில் மெஜாரிட்டி இல்லை. மெஜாரிட்டி இருந்திருந்தால் வினேஷ் போகத்தை ஊக்குவிக்கும் விதமாக காங்கிரஸ் அவருக்கு ராஜ்ய சபா இடத்தை ஒதுக்கியிருக்கும் என தீபிந்தர் சிங் ஹூடா தெரிவித்திருந்தார்.

ராஜ்ய சபா தேர்தல் செப். 3ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் வரும் ஆக. 14ஆம் தேதி தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடும். மேலும், வேட்புமனு தாக்கலின் கடைசி நாள் ஆக. 21ஆம் ஆக அறிவிக்கப்படும். ஆக. 25ஆம் தேதிதான் வினேஷ் போகத் 30 வயதை அடைகிறார் என்பதால் அவரால் போட்டியிட முடியாது. தேர்தல் 4-5 நாள்கள் தாமதமாக நடந்தால் அவர் போட்டியிட வாய்ப்பிருக்கிறது எனலாம். ஆனால், தேர்தல் தேதி மாறுவதற்கு 1% கூட வாய்ப்பில்லை.

உறவினர்கள் சாடல்

காங்கிரஸ் கட்சியின் இந்த கூற்றை வினேஷ் போகத்தின் உறவினர் மகாவிர் போகத் கடுமையாக சாடியுள்ளார். அவர் இதுகுறித்து கூறுகையில்," தங்களுக்கு மெஜாரிட்டி இருந்தால் வினேஷ் போகத்தை ராஜ்யசபாவுக்கு அனுப்பியிருப்பேன் என்று தற்போது பூபிந்தர் ஹூடா கூறுகிறார். 

ஆனால், அவர் ஆட்சியில் இருந்தபோது ஏன் கீதா போகத்தை (வினேஷ் போகத்தின் மூத்த சகோதரி) அனுப்பவில்லை. கீதா போகட் பல சாதனைகளை படைத்துள்ளார். பூபிந்தர் சிங் ஹூடா ஆட்சியில் இருந்தபோது, ​​கீதாவை துணைக் காவல் கண்காணிப்பாளராக கூட நியமிக்கவில்லை" என சாடினார். கீதா போகத்தும் மல்யுத்த வீராங்கனை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

அரசியல் சாம்பியன் காங்கிரஸ் 

அதேபோல் வினேஷ் போகத்தின் உறவினரும், மல்யுத்த வீராங்கனையுமான பாஜக நிர்வாகி பபிதா போகத் காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பை அரசியல் நாடகம் என சாடியுள்ளார். இதுகுறித்து அவரது X பதிவில்,"ஆபத்திலும் அரசியல் லாபத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை காங்கிரஸிடம் இருந்து நம்மில் யாராவது கற்றுக் கொள்ள வேண்டும். சாம்பியன்களுக்கெல்லாம் சாம்பியன் வினேஷ் என்றால், அரசியலின் சாம்பியன் காங்கிரஸே ஆக தான் இருக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடானது, கவலை அளிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்... உச்ச நீதிமன்றம் உத்தரவு - அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More